நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த குறைந்த தொகை வழங்குவதா? தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு வீடுகளில் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு

சீர்காழி, மார்ச் 19: சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படு–்த்த குறைந்த தொகை வழங்க உள்ளதால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் முடிவுசெய்துள்ளனர். விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை 180 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தனியார் நிறுவனங்கள் மூலம் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது.  இதன் தொடர்ச்சியாக சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் வரை 56 கி.மீ தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிக்கு 1,470.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  சீர்காழி சட்டநாதபுரத்திலிருந்து தென்னலக்குடி அண்ணங்கோயில், நாங்கூர், ராதாநல்லூர், பாகசாலை, காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், கருவிழந்தநாதபுரம், தலைச்சங்காடு உள்ளிட்ட 20 கிராமங்கள் வழியே நான்கு வழிச்சாலை செல்கிறது.  இந்த பகுதியில் கையகப்படுத்தும் நிலங்களுக்கு சதுரடிக்கு ரூ.6 முதல் ரூ.11 வரை வழங்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு சதுரடிக்கு குறைந்த பட்சம் ரூ.200 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில் சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு கடைவீதியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு சதுரடிக்கு ரூ.200க்கு மேல் சந்தை மதிப்பிற்கு தகுந்தாற்போல் கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி அந்த பகுதிகளில் வீடுகளில் கருப்பு கொடியேற்றி வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: