பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி தொடக்கம்

ஊத்துக்கோட்டை, மார்ச் 19: பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் பழுதடைந்து பயன்பாடு இல்லாத நிலையில் துணை சுகாதார நிலையம் இருந்து வந்தது. “தினகரன்” செய்தி  எதிரொலியால் தற்போது ₹20 லட்சத்தில் புதிய ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடப் பணி  தொடங்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே பூச்சி அத்திப்பேடு  கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 36 வருடங்களுக்கு முன்பு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு பூச்சி அத்திப்பேடு, ஆயலச்சேரி, புதுகுப்பம், வாணியன் சத்திரம், கோடுவெளி ஆகிய 10 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் வார, மாத பரிசோதனை செய்வது, கர்ப்பிணிகள் பதிவு, டாக்டர் முத்து லட்சுமிரெட்டி மகப்பேறு நினைவு நிதி கொடுப்பது  ஆகியவற்றிக்காக பயன்படுத்தி வந்தனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சிறு, சிறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த துணை சுகாதார  நிலையத்தை யாரும் பயன்படுத்தாததால் கடந்த 10  வருடங்களாக மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது.  இதில் பணியாற்ற வரும் டாக்டர், செவிலியர் தற்போது பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தான் சிகிச்சையளித்து வருகின்றனர். எனவே பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் புதிதாக ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பான செய்தி “தினகரன்” நாளிதழில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி படத்துடன் வெளியானது. பின்னர் இதையறிந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ₹20 லட்சம் செலவில் புதிய ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகளை தற்போது தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: