கரூர் பாராளுமன்ற தொகுதி காங். வேட்பாளர் அறிவிப்புக்கு பின் தேர்தல் பிரசாரம் களை கட்டுமா? அரசியல் கட்சியினர் எதிர்பார்ப்பு

கரூர், மார்ச் 19: கரூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் களை கட்டவுள்ளது. கரூர் பாராளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல், அதிமுக சார்பில், சிட்டிங் எம்பி தம்பிதுரையே திரும்பவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மட்டுமே இன்னும் கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில், அமமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கவேல், நேற்று கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறையில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். இந்த கட்சிக்கு இன்னும் சின்னம் அறிவிக்கப்படாத நிலையிலேயே அவர், பெயரளவுக்கு பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

மேலும், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தம்பிதுரை, நேற்று மாலை கரூர் வந்ததோடு, அனைத்து கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்த கையோடு, கட்சி அலுவலகம் வந்து விட்டு, மற்ற தொகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்திக்க புறப்பட்டுச் சென்று விட்டார். கரூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பது மட்டும் அறிவிக்கப்பட்ட உடனேயே கரூர் தொகுதி பரபரப்பாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: