விசாரணை என்ற பேரில் போலீசார் தாக்கியதாக புகார்

கூடலூர், மார்ச் 15: கூடலூரில் கூலி தொழிலாளியை விசாரணைக்காக அழைத்து சென்று போலீசார் தக்கியதாக புகார் எழுந்துள்ளது. கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யசீலன்(40), கூலிதொழிலாளி. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கடந்த 13ம் தேதி கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சத்யசீலன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு மூன்று காவலர்கள் சேர்ந்து சத்தியசீலனை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது சத்யசீலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நீலகிரி மாவட்ட எஸ்.பி.,சண்முகபிரியாவிடம் சத்தியசீலன் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விசாரிக்க வேண்டும் என கூடலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த 13ம் தேதி என்னை அழைத்து வந்தனர். அப்போது போலீசார் பரதன், பிரவீன் மற்றும் பெள்ளி ஆகியோர் நீதான சிவராஜ் எஸ்ஐ., குறித்து வாட்ஸ் அப் மூலம் முன்னாள் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தாய் என கூறி தாக்க தொடங்கினர். அதுமட்டுமின்றி எனது கைப்பேசியையும் பிடுங்கி கொண்டனர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ இவ்வாறு இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: