முதுமலை வனத்தில் காட்டு தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் வரவழைப்பு

ஊட்டி, மார்ச் 15: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை கட்டுப்படுத்த சூலூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம்  துவங்கி நான்கு மாதத்திற்கும் மேலாக உறைபனி நீடித்தது.  இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான வனத்தில் செடி, கொடிகள் காய்ந்து காணப்பட்டது. அதுமட்டுமின்றி வனப்பகுதியில் உள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் வறண்டு காணப்பட்டது.  இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடித்தது. இதை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான வனவிலங்குகள் தற்போது முதுமலையை விட்டு இடம் பெயர துவங்கிவிட்டன. மேலும் தற்போது ஆங்காங்கே காட்டு தீ பரவுவதால் விலை உயர்ந்த மரங்கள் மற்றும் அரிய வகை விலங்குகள், பறவைகள் போன்றவைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், முதுமலை வனத்திற்குட்பட்ட எப்பநாடு மலை சரிவு, சிகூர், சிறியூர் பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், காட்டு தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர். இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் கோவை சூலூர் விமான நிலையத்தில் இருந்து காட்டு தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. எப்பநாடு, சீகூர் மற்றும் சிறியூர் வனங்களை ஒட்டி ஹெலிகாப்டர் வட்டமிட்டது. ஆனால், அதற்குள் காட்டு தீ கட்டுக்குள் வந்ததால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்படாமல் ஹெலிகாப்டர் மீண்டும் கோவை சென்றது. மேலும், தொடர்ந்து இப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டால், அதனை கட்டுப்படுத்த சூலூர் விமான நிலைய ஹெலிகாப்டரை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்டும் என முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை காட்டு தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் பயன்படுத்தியதில்லை. முதன் முறையாக தற்போது காட்டு தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: