அம்பத்தூர், திருவள்ளூர் அருகே ரவுடி, வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது

அம்பத்தூர், மார்ச் 15: அம்பத்தூர் ரவுடி மற்றும் திருவள்ளூர் வாலிபர் ஆகியோரது கொலை வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்த சத்யா (எ) செங்குட்டுவன் (39). பிரபல ரவுடி. நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் அம்பத்தூர் ரயில்வே கேட் அருகில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 பேர் திடீரென சத்யாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரை சார்ந்த நாகராஜ் (37), ராஜ்குமார் (35), பெரம்பூர் பிரகாஷ் அவென்யூவை சேர்ந்த நிஜாமுதீன் (35) ஆகியோர் சத்யாவை கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர்கள் 3 பேரையும் நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு நபர்கள் யாருக்கும் தொடர்பு உண்டா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறியதாவது:கொலை செய்யப்பட்ட சத்யாவின் அண்ணன் ஆடலரசு கடந்த 2004ம் ஆண்டு ஐசிஎப் காவல் நிலைய பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகராஜ், ராஜ்குமார், நிஜாமுதீன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். அப்போது, சத்யா தனது அண்ணனை ெகான்ற நாகராஜ், ராஜ்குமார், நிஜாமுதீன் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மூவரும், சத்யாவை விட்டுவைத்தால் தங்களது உயிருக்கு ஆபத்து என்று கருதி, திட்டமிட்டு அவரை வெட்டிக்கொன்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். திருவள்ளூர்:  திருவள்ளூர், பெருமாள்பட்டு பெரியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் விக்கி என்கிற விக்னேஸ்வரன் (22). கடந்த 9ம் தேதி இரவு 11 மணிக்கு முத்துமாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விக்னேஸ்வரனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரன் இறந்தார்.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து பெருமாள்பட்டு விக்னேஷ் (21), அஜீத்குமார் (21), கோபிராஜ் (22), அஸ்வின் (22), நரேஷ்குமார் (21), திருநின்றவூர் ராஜ்குமார் (21), கோயில்குப்பம் தினேஷ் (26) ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், ‘கொலையான விக்கி என்ற விக்னேஸ்வரன், வாலிபால் போட்டி நடத்துவதாக கூறி கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மற்றும் எங்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பணம் தராவிடில் கொலை செய்வேன் என மிரட்டினார். இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் விக்கியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினோம். பின்னர் போலீசார் எங்களை கைது செய்தனர்’ என கூறியுள்ளனர்.

Related Stories: