தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைவதாக புகார் பெண்கள் உள்பட 100 பேர் உண்ணாவிரதம்

கும்மிடிப்பூண்டி, மார்ச் 15: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் இயங்கும் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்படைவதாக குற்றம்சாட்டி பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை கிராமத்தில் 50 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அப்பகுதியில் இயங்கும் இரும்பு உருக்காலை, ஆட்டோ மொபைல் உதிரிபாகம்  தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் கம்பெனிகளின் கழிவுகள், கருப்பு துகள்கள், மண் ஆகியவற்றை கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த சாலையில் துர்நாற்றம் வீசுவதோடு, சாலையில் செல்வோருக்கு கண் எரிச்சல் உள்பட பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீரும் பாதிப்படைவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்

படுகிறது.

இதுகுறித்து சிறுபுழல்பேட்டை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை கூறப்படுகிறது.இதை கண்டித்து நேற்று பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் சிறுபுழல்பேட்டை-சிப்காட் சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து  போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வட்டாட்சியர் சுரேஷ்பாபு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது துறை ரீதியான புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த உண்ணாவிரத போராட்டம் சுமார் 6 மணி நேரம் நடைபெற்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

Related Stories: