ஏகாம்பரநாதர் கோயில் பிரமோற்சவ விழாவில் போலீஸ் பாதுகாப்புடன் சோமஸ்கந்தர் உற்சவர் சிலை ஊர்வலம் நடக்கிறது

சென்னை, மார்ச் 15: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் சோமஸ்காந்தர் பழைய உற்சவர் சிலையை வைத்து வழிபாடு  நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சோமஸ்கந்தரின் பழைய உற்சவர் சிலையை சரி செய்து பிரமோற்சவத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல் தலைமையில் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.ஆனால், கடந்த 2 நாட்களாக சிலை பழுது பார்க்கும் பணி தொடங்காமல், இந்து சமய அறநிலையத்துறை காலம் கடத்தியது. இதனை கண்டித்து, பக்தர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.இதைதொடா–்ந்து, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்தபதி தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் காலை முதல் பழைய உற்சவர் சிலையை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இரவு 9 மணி வரை பணிகளை செய்தனர்.இந்த பணிகள், வேலூர் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலன் உள்ளிட்ட அதிகாரிகள், சிவபக்தர்கள், பொதுமக்கள் என பலரது முன்னிலையில் நடந்தது.இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், நேற்று காலை கோயிலுக்கு வந்தார். அங்கு, பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், செய்தியாளரிடம் கூறியதாவது:

நீதிமன்ற உத்தரவுபடி தொன்மையான சிலைகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் உற்சவர் சிலை வீதி உலா நடக்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் ஒரு ஏடிஎஸ்பி தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் தினமும் ஈடுபவர். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி முறையாக சிலை புனரமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த பணி சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது. நாளை முதல் காலை, மாலை, இரவு நேரங்களில் தொடர்ந்து உற்சவங்கள் நடைபெறும். உற்சவர் நாள்தோறும் வீதியுலா செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தேவைப்படும் விழாக்களுக்கு, இந்த தொன்மையான சிலையை பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றார். நீண்ட போராட்டத்துக்கு பின் பழைய உற்சவர் சிலை, மீண்டும் புனரமைக்கப்பட்டு வீதி உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் சிவபக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: