பாகவதபுரம் கிராமத்தில் அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை

திருத்தணி, மார்ச் 15: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கிராம பொதுமக்கள் ₹75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை சீர்வரிசையாக நேற்று வழங்கினர். மேலும் வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிற்கு, பத்து மாணவர்களுக்கான சேர்க்கையும் நடந்தது.திருத்தணி ஒன்றியம், சிறுகுமி ஊராட்சிக்குட்பட்ட பாகவதபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 47 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஒரு குழந்தை கூட தனியார் பள்ளியில் படிக்காமல் அரசு பள்ளியில் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இந்த பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் சீர்வரிசை வழங்கும் விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. இதில், கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து, பள்ளிக்கு தேவையான கம்ப்யூட்டர், மின்விசிறி, பாய், நாற்காலி, குளிர்சாதன இயந்திரம், தண்ணீர் டிரம், இருக்கைகள், மேஜைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் என மொத்தம், ₹75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர். முன்னதாக இந்த பொருட்களுடன் புதிதாக பள்ளியில் சேரும் 10 மாணவர்களுடன் சீர்வரிசை மற்றும் மாணவர் சேர்க்கை ஊர்வலம் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் துவங்கியது. கிராமங்களில் அனைத்து வீதிகளில் ஊர்வலமாக பள்ளி வளாகம் வந்தடைந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்துக்கு தலைமை ஆசிரியர் எஸ்.பாலசுந்தரம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் எழில் என்ற ஏழுமலை வரவேற்றார்.  இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சரவணன், பொற்செல்வி, தலைமை ஆசிரியர்கள் சேகர், பாஸ்கர், உமாபதி, எழலரசு ஆகியோர் பங்கேற்று பேசினார். இதில் கிராம மக்கள், மாணவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.

Related Stories: