வாக்காளர்களுக்கு மது கொடுப்பதை தடுக்க ஒவ்வொரு விற்பனைக்கும் ரசீது

திருவள்ளூர், மார்ச் 15: வாக்காளர்களுக்கு சரக்கு கொடுப்பதை தடுக்க, டாஸ்மாக் கடைகளில், ஒவ்வொரு விற்பனைக்கும் ரசீது வழங்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் இலவச திட்டங்களை நிறைவேற்ற, அரசுக்கு உறுதுணையாக இருந்தது டாஸ்மாக் கடைகள் தான். இதன்மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. குடிப்பழக்கம் சர்வ சாதாரணமாக மாறி விட்டதால், தேர்தலில் ஓட்டு வாங்கும் உத்தியாக மது வினியோகம் பயன்படுகிறது. கடந்த தேர்தலில் இந்த ‘’பார்முலா’’ ஆளும் கட்சிக்கு பெருமளவு கை கொடுத்தது.தேர்தல் களத்தில் எப்போதும் சரக்குகளுக்கு ‘மவுசு’ அதிகமாகும். கட்சி தொண்டர்களுக்கு முறையாக சரக்குகள் கிடைக்காவிட்டால், பிரச்சார நேரத்தில் தலை காட்டமாட்டார்கள். எனவே, தேர்தல் தேதி அறிவித்தவுடன் பெரும்பாலான அரசியல் கட்சியினர், தேவையான அளவு சரக்குகளை பதுக்கி வைப்பது வழக்கம்.வரும் தேர்தலில், இதுபோன்ற விஷயங்களில் தேர்தல் கமிஷன் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதன்படி, டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் விற்கும்போது, கட்டாயம் ரசீது வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. விற்பனையாளர்கள் ரசீது தருகிறார்களா? என, கலால் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இந்த உத்தரவை பின்பற்றாவிடில் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மிலிட்டரி சரக்குக்கு மவுசு

தேர்தல் கமிஷனனின் கிடுக்குப்பிடியால் டாஸ்மாக் கடைகளில் ஒட்டு மொத்தமாக சரக்குகளை கொள்முதல் செய்வதில் ஆளும் கட்சியினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பார்வை, தற்போது மிலிட்டரி சரக்குகளின் பக்கம் திரும்பியுள்ளது.ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கும் சரக்குகளை பலர், வெளி மார்க்கெட்டில் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். அவர்களை ஆளும் கட்சியினர் வளைத்து போட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் அவர்களிடம் இருந்து தேவையான அளவு சரக்குகளை பெற்று, தொண்டர்களுக்கு வினியோகம் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். தற்போதே மிலிட்டரி கேன்டீன் பக்கம் ஆளும்கட்சி கரை வேஷ்டிகள் தென்படுகிறது.

Related Stories: