முன்னறிவிப்பின்றி கொடி கம்பங்கள், கல்வெட்டுகளை இடித்து அகற்றியதால் கட்சியினர் சாலை மறியல் துறையூரில் பரபரப்பு

தா.பேட்டை, மார்ச் 15: துறையூரில் அரசியல் கட்சியினர் அமைத்திருந்த கொடி கம்பங்களையும், கல்வெட்டு மற்றும் சிமெண்ட் மேடைகளை நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியதால் அரசியல் கட்சியினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுஇடங்களில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து அலுவலர்கள் அவற்றை அகற்றியும், மறைத்தும் வருகின்றனர். இந்நிலையில் துறையூர் பஸ் நிலையம் அருகே  அரசியல் கட்சியினர் அமைத்திருந்த கொடி கம்பங்களையும், அதன் அருகே இருந்த கல்வெட்டு, சிமெண்ட் மேடை ஆகியவற்றையும், நகராட்சி நிர்வாகம் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். இதனால் அதிர்ச்சியடைந்த திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி கட்சிகொடி கம்பம், கல்வெட்டு பலகை ஆகியவற்றை இடித்து அகற்றியதை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. போராட்டத்தில் திமுக எம்எல்ஏ ஸ்டாலின்குமார், முக்கிய நிர்வாகிகள், மெடிக்கல் முரளி, தர்மன்ராஜேந்திரன், கார்த்தி, சுதாகர், கம்யூனிஸ்ட் ஆனந்த், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் மற்றும் துறையூர் தாலுகா அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அரசியல் கட்சியினர் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த முசிறி கோட்டாட்சியர் ரவிசந்திரன், டிஎஸ்பி தமிழ்மாறன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம், பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: