வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்டம்

மணப்பாறை, மார்ச் 15:  வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் மாசிப் பெருவிழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 8ம் திருநாளான நேற்றுமுன்தினம் மாலை வீரப்பூர் கன்னிமாரம்மன் வகையறா கோயில் பெரிய காண்டியம்மன் ஆலயதிடலில் வேடபரி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து ஒன்பதாம் திருநாளான நேற்று பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. நண்பகல் பெரியகாண்டியம்மன் பூப்பல்லக்கில் மேளத்தாளத்துடன் தேர் நிறுத்தம் வந்து தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சாம்புவன் காளை முரசு கொட்டி முன்னே செல்ல அதைத் தொடர்ந்து ஜமீன்தார்கள் பொன்னழகேசன் மற்றும் சுதாகர்  மற்றும் பட்டயதாரர்கள் வடம்பிடித்து துவங்கி வைக்க திருவிழாவின் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயிலின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் வலம் வந்து பின் தேர் நிலைநிறுத்த மண்டபத்தை அடைந்தது. இன்று  (வெள்ளிக்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories: