திருச்சியில் இருேவறு இடங்களில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல்

திருச்சி, மார்ச் 15:  பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சியில் இருவேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது.பொள்ளாச்சியில் மாணவியை  பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் 4 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் உரிய நீதிகேட்டும், குற்றவாளிகளை கடுமையாக  தண்டிக்க கோரியும் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் அதிகாரம் உறுப்பினர் நிர்மலா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ, சிபிசிஐடி விசாரணை செய்வது குற்றவாளிகளை பாதுகாக்கும் விதமாக உள்ளது. அனைவரையும் பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டுப்பாடி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கிடையே கைது செய்யப்பட்ட 4 பேரின் புகைப்படங்களை பெண்கள் துடைப்பத்தால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, ஒருங்கிணைப்பாளர் ராஜா, சிபிஐ மாவட்ட செயலாளர் திராவிடமணி, பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கமலகண்ணன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இச்சம்பவத்தை கண்டித்து திருவெறும்பூர் அடுத்த காட்டூர் உருமுதனலெட்சுமி  கல்லூரி மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சி- தஞ்சை தேசிய  நெடுஞ்சாலையில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க  தலைவர் மோகன்ராஜ் தலைமையில்  கல்லூரியிலிருந்து காட்டூர் ஆயில் மில் வரை  ஊர்வலமாக வந்து. திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்  தலைமையிலான போலீசாரும், அரியமங்கலம் போலீசாரும் அங்கு வந்து மாணவர்களை  அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை  அரியமங்கலம் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு பொன்மலை உதவி கமிஷனர் பாலமுருகன்  வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தார்.

Related Stories: