இளம்பிள்ளையில் டைமிங் பிரச்னை தனியார், அரசு பஸ் டிரைவர்கள் தகராறு

இளம்பிள்ளை, மார்ச் 15: இளம்பிளளை மற்றும் இடங்கணசாலை மைய பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம், ராசிபுரம், மேட்டூர், இடைப்பாடி, தாரமங்கலம், ஓமலூர், காகாபாளையம், கொண்டலாம்பட்டி, சித்தர்கோயில், மகுடஞ்சாவடி, கே.ஆர்.தோப்பூர், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் வந்து செல்கின்றன. இளம்பிள்ளை சுற்றுவட்டார கிராமங்களில் அதிக அளவில் விசைத்தறி கூடங்கள் உள்ளன. சேலை உற்பத்தி செய்து வெளிமாநிலத்துக்கு, மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதால் இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே டைமிங் பிரச்னையில் தகராறு ஏற்பட்டு வருகிறது. அவர்கள் பேருந்து நிலையத்தில் பஸ்களை மறித்து நிறுத்தி ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொள்வதால், அங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பெண்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், பல டிரைவர்கள் மது போதையில் பஸ்சை ஓட்டுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அடிக்கடி தகராறில் ஈடுபடும் டிரைவர்கள் மற்றும் போதை டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: