பத்ரகாளியம்மனுக்கு 403 வகை அபிஷேகம்

மேட்டூர், மார்ச் 15:  மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில், அம்மனுக்கு ஒரே நேரத்தில் 403 வகை சிறப்பு அபிஷேகம் மற்றும் காலபைரவருக்கு அஷ்டமி பூஜை நடைபெற்றது. இதில்  தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். நேற்று காலை 5 மணி முதல் 9 மணிவரை ஹோமங்கள் நடத்தப்பட்டன. மதியம் பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. கர்நாடக மாநில பக்தர்கள் 500 பால்குடங்களுடன் ஆலயத்தை சுற்றி வலம் வந்தனர்.  தொடர்ந்து  பத்தரகாளியம்மனுக்கு ஒரே நேரத்தில் 403 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. சுமார் 500 லிட்டர் பால், 250 லிட்டர் தயிர், 1000 இளநீர், சிறப்பு திரவியங்கள் 500 கிலோ கொண்டு, இந்த சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகை தாரா குடும்பத்தினர் பங்கேற்றனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜா, கணக்காளர் கலைவாணன் மற்றும் பக்தர்கள்  செய்திருந்தனர்.

Related Stories: