கூலி உயர்வு தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் பிரசாரம் தொழிலாளர்களை பட்டறையில் வைத்து பூட்டிய விசைத்தறி அதிபர்

பள்ளிபாளையம், மார்ச் 15: கூலி உயர்வு தொடர்பாக பிரசாரம் மேற்கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகளை கண்டதும் விசைத்தறி பட்டறையில் வேலை செய்த தொழிலாளர்களை வெளியே விடாமல் கதவை பூட்டிய விசைத்தறி அதிபரால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்குவது தொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதில், தொழிலாளர்களுக்கு 8 சதவீத கூலி உயர்வு வழங்கப்படும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.  இதை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் நடக்க இருந்த கூலி உயர்வு பேச்சுவார்த்தை திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டது தொடர்பாக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவும், கூலி உயர்வு போராட்டம் குறித்து பிரசாரம் செய்யவும் ஏஐசிசிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் தொழிற்சங்கத்தினர் ஆவத்திபாளையம், சின்னத்தலவணாங்காடு உள்ளிட்ட பகுதிக்கு சென்று துண்டறிக்கைகளை விநியோகித்தனர். அப்போது, சின்னத்தலவணாங்காட்டை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் ஒருவர் தொழிற்சங்க நிர்வாகிகளை கண்டதும், ஓட்டமாக ஓடி தனது விசைத்தறி பட்டறையை வெளிப்பக்கமாக தாழிட்டார். இதனைக்கண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்ட தகவலை தொழிலாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். எனவே, அவர்களை வெளியே விடுங்கள் என நிர்வாகிகள் கூறினர். அதற்கு விசைத்தறி உரிமையாளர், தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கில் முன்பணம் கொடுத்துள்ளேன். இதை கொடுத்துவிட்டு தொழிலாளர்களை கூட்டிச்செல்லுங்கள் என அவர் கறாராக தெரிவித்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களை பார்த்துவிட்டுதான் செல்வோம் எனக்கூறி தொழிற்சங்க நிர்வாகிகள் அங்கேயே அமர்ந்தனர். இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தொழிற்சங்கத்தினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகும் விசைத்தறி பட்டறையில் உள்ள தொழிலாளர்களை சந்திக்க முடியாமல் தொழிற்சங்க நிர்வாகிகள் சங்க அலுவலகத்திற்கு திரும்பினர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories: