நாமக்கல் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 450 பேர் ஆப்சென்ட்

நாமக்கல், மார்ச் 15: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 90 மையங்களில் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு நடந்தது. இதில் 450 பேர் தேர்வு எழுத வரவில்லை. நடப்பாண்டு 309 பள்ளிகளை சேர்ந்த 11,574 மாணவர்களும், 10,353 மாணவிகளும், 605 தனித்தேர்வர்கள் என மொத்தம் 22,532 பேருக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 4.45 மணிக்கு முடிந்தது. கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு மையங்களுக்கு சென்று தேர்வினை பார்வையிட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்றைய தேர்வில் 450 பேர் தேர்வு எழுத வரவில்லை. நேற்று தமிழ்முதல் தாள் தேர்வு நடந்தது. இத்தேர்வில் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் மெல்ல கற்கும் மாணவர்காளுக்கு கடினமாக இருந்ததாக தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு மதிப்பெண் பகுதியில் புத்தகத்தில் உள்ளபடி நேரடியாக கேள்வி கேட்காமல் மாற்றி கேட்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கண்ணகியின் கால் சிலம்பில் உள்ள பரல்கள் எது என்ற நேரடியான கேள்வி, தேர்வில், பாண்டிய மன்னரின் அரசவையில் கண்ணகி உடைத்த சிலம்பில் இருந்து வெளிப்பட்ட பரல் எது என கேட்கப்பட்டுள்ளது. நேரடியாக இந்தகேள்வி வந்திருந்தால் மெல்ல கற்கும் மாணவர்கள் மாணிக்கம் என சரியான பதிலை எழுதியிருப்பார்கள். கேள்வி மாற்றி கேட்கப்பட்டுள்ளதால் அவர்கள் குழப்பம் அடைந்துவிட்டனர்.

இது போல 2 மதிப்பெண் பகுதியிலும் சில கேள்விகள் கடினமாக இருந்தது. 5 மதிப்பெண் பகுதியில் நேரடியாக கேள்விகள் இடம்பெற்றுள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

இவ்வாறு தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: