எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு துவங்கியது 88 மையங்களில் 26,867 பேர் எழுதினர்

கிருஷ்ணகிரி, மார்ச் 15: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 88 மையங்களில் 26,867 மாணவ, மாணவிகள் எழுதினர். பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கத்திற்கு மாறாக மதிய வேளையில் தேர்வு நடைபெற்றதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் நேற்று(14ம் தேதி) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் மத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 88 மையங்களில் 26,867 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் 677 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக முதன்மை கண்காணிப்பாளர்களாக 88 பேர், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக 11 பேர், துறை அலுவலர்களாக 88 பேர், கூடுதல் துறை அலுவலர்களாக 16 பேர், வழித்தட அலுவலர்களாக 25 பேர், அறைக் கண்காணிப்பாளர்களாக 1540 பேர், பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்களாக 136 பேர், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களாக 8 பேர் என மொத்தம் 1912 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் முதல் முறையாக காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. நேற்று நடந்த தமிழ் முதல் தாள் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு துவங்கி, மாலை 4.45 மணிக்கு நிறைவடைந்தது. இதேபோல், தமிழ் 2ம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் 2ம் தாள் ஆகியவற்றுக்கான தேர்வுகள் மதியம் 2 மணி முதல் 4.45 மணி வரையும், பிற மொழி பாடங்கள் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் காலை 10 மணி முதல் 2.10 மணி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணிபுரிய, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்றுள்ள ஆசிரியர்கள் வீடு திரும்பும் நிலை தான் பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், உச்சி வெயில் கொளுத்தும் நேரத்தில் தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: