பொள்ளாச்சி விவகாரத்தில் நீதி விசாரணை கோரி ஓசூரில் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

ஓசூர், மார்ச் 15:  பொள்ளாச்சி பாலியல் கொடுமை விவகாரத்தில் நீதி விசாரணை நடத்திட கோரி ஓசூரில் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மற்றும் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தியும், நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் போராட்டம் வலுத்துள்ள நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியிலும் போராட்டத்தில் குதித்தனர். பெண்களிடம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை தூக்கிலிட வலியுறுத்தி அரசு ஆடவர் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஓசூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன் நேற்று தமிழக மாணவர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; நீதி விசாரணை வேண்டும். பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கு அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: