தேன்கனிக்கோட்டை அருகே காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து தீ வைத்த இருவர் கைது

தேன்கனிக்கோட்டை, மார்ச் 15:

தேன்கனிக்கோட்டை அருகே காப்புக்காட்டில் அத்துமீறி  நுழைந்து தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் பெட்டமுகிலாளம், அய்யூர், கொடகரை வனப்பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தீ பிடித்து எரிவது வாடிக்கையாக உள்ளது. இதில், மரம் மற்றும் செடிகொடிகள் நாசமாகி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர் தொலுவபெட்டா வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாராயணப்பா கொல்லை என்னுமிடத்தில் ஆங்காங்கே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் இருந்து 2 பேர் ஓட்டம் பிடித்தனர். இருவரையும் பிடித்து விசாரித்ததில் பெல்லட்டி கிராமம் நாராயணகொல்லை பகுதியைச் சேர்ந்த பசுவராஜ்(39), திம்மப்பன்(45) என தெரியவந்தது. வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து சருகுகளுக்கு தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் கைது செய்து ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்ற உத்தவின்பேரில், இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.  

Related Stories: