சில்லரை பிரச்னையால் தகராறு அரசு பஸ்சை வழிமறித்து தாக்குதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 15:  கிருஷ்ணகிரி அருகே சில்லரை பிரச்னையில் மூதாட்டியுடன் தகராறு தொடர்பாக அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டரை அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி-சந்தூர் வழியில் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சந்தூர் சென்ற இந்த பஸ்சில், மோடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மாதுகுமார் நடத்துனராகவும், எம்.வி. அள்ளியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் டிரைவராகவும் இருந்தனர். இந்நிலையில், கருங்கல்கொட்டாய் பகுதியில் மூதாட்டி லலிதா(65) என்பவர் ஏறியுள்ளார். அவருடன் சேர்த்து 3 பேர் அதே ஸ்டாப்பில் ஏறினர். அவர்களிடம் டிக்கெட்டிற்கான கட்டணத்தை தனித்தனியாக ெபற்றுக்கொண்ட கண்டக்டர், மீதி சில்லரைக்கான தொகையை மொத்தமாக வழங்கி, அனைவரும் பிரித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை லலிதா ஏற்க மறுத்துள்ளார். தனக்கு தனியாக சில்லரை கொடுக்குமாறு கூறியதால் வாக்குவாதத்துடன் தள்ளுமுள் ஏற்பட்டுள்ளது. அப்போது, லலிதாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆலமரம் என்னுமிடத்தில் மூதாட்டி இறங்கி விட்டார். பஸ் சந்தூர் சென்றுவிட்டு, மீண்டும் அதே வழியில் கிருஷ்ணகிரிக்கு திரும்பியது. அப்போது, லலிதாவின் கணவர் அண்ணாமலை, மகள் சுமதி, பேரன் அருண்குமார் ஆகியோர் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர், கண்டக்டரிடம் கடுமையாக சண்டையிட்டுள்ளனர். இருதரப்பும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், காயமடைந்த கண்டக்டர், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் கண்டக்டர் தாக்கியதாக மூதாட்டி லலிதாவும் புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: