தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் 200வது முறை போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன்

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில், 200வது முறையாக போட்டியிட வரும் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக மேட்டூர் தேர்தல் மன்னன் பத்மராஜன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன் (61). இவர் டயர் ரீடிரேடிங் தொழில் செய்து வந்தார். கடந்த சில வருடங்களாக அந்த தொழிலை விட்டு விட்டார். இவரது மனைவி ஸ்ரீஜா நம்பியார். மகன் ஸ்ரீஜேஸ் பத்மராஜன். இவர் எம்பிஏ, எம்.பில் படித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். தேர்தல் எங்கு நடந்தாலும் அங்கு சென்று போட்டியிடுவதால் பத்மராஜனை தேர்தல் மன்னன் என்று அழைக்கிறார்கள். இணையதளத்திலும் எலக்சன் கிங் என்று டைப் செய்தால், பத்மராஜன் பற்றிய தகவல்கள் கிடைக்கிறது.  இவர், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேர்தல் விதிமுறைகள் பற்றியும், அதற்கு தேவையான ஆவணங்கள் பற்றியும் கேட்டறிந்தார். படிவம் எண் 26ல் திருத்தம் வந்துள்ளது. அந்த படிவத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது தேர்தல் மன்னன் பத்மராஜன் கூறுகையில், ‘இதுவரை 199 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். வெற்றியே பெற்றது கிடையாது. தேர்தலில் எல்லோரும் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே நான் செலவு செய்து போட்டியிடுகிறேன். 200வது முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளேன். வரும் 19ம் தேதி, தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். முன்னதாக வேட்பு மனுதாக்கல் செய்யதேவையான விஷயங்களை கேட்டறிந்து செல்ல, தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலத்திற்கு வந்துள்ளேன்,’ என்றார்.

Related Stories: