பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் பெரம்பலூர் மாவட்டத்தில் 8,656 மாணவர்கள் எழுதினர் 121 ஆப்சன்ட்

பெரம்பலூர், மார்ச் 15: பெரம்பலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் 8,656 மாணவர்கள் தேர்வெழுதினர். 121 பேர் தேர்வெழுத வரவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வரும் 29ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 140 அனைத்துவகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 4,595 மாணவர்கள், 4,182 மாணவிகள் என மொத்தம் 8,777 பேர், 37 தேர்வு மையங்களில் எழுத அனுமதிக்கப்பட்டு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாளான நேற்று 4,513 மாணவர்கள், 4,143 மாணவிகள் என மொத்தம் 8,656 பேர் தேர்வெழுதினர். மாணவர்களில் 82 பேர், மாணவிகளில் 39 பேர் என மொத்தம் 121 பேர் தேர்வுக்கு வரவில்லை.  தேர்வு மையங்களை கலெக்டர் சாந்தா, டிஆர்ஓ அழகிரிசாமி, அரசு தேர்வுகள் இயக்குனரக துணை இயக்குனர் வீரக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கன், மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தைராஜன், மாரிமீனாள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தேர்வு பணிகளுக்காக 49 பறக்கும் படையினர்,

11 வழித்தட அலுவலர்கள், 491 அறை கண்காணிப்பாளர்கள், 37 முதன்மை கண்காணிப்பாளர்கள், 37 துறை அலுவலர்கள், 6 கூடுதல் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 45 மாற்றுத்திறனாளிகள் எழுதுகின்றனர். இதில் கண் பார்வையற்ற 29 பேருக்கு சொல்வதை எழுதுவோர் எனப்படும் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கைகள் நடுக்கமுள்ள  16 மாணவர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 10,935 மாணவ, மாணவிகள் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த 3 கல்வி மாவட்டங்களில் இருந்து 173 பள்ளிகளை சேர்ந்த 5,381 மாணவர்கள், 5,554 மாணவியர்கள் உட்பட மொத்தம் 10,935 பேர், 49 மையங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கு 52 முதன்மை கண்காணிப்பாளர்கள், 9 வழித்தட அலுவலர்கள், 100 பறக்கும்படை அலுவலர்கள், 560 அறை கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: