ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பயணியை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிய பெண் போலீஸ்: பயணிகள், அதிகாரிகள் பாராட்டு

சென்னை: ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த பயணியை, விரைந்து மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய பெண் போலீசுக்கு பயணிகள் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். வேலூர் மாவட்டம் டி.சி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தீபன் (58). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று வேலூர் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அங்கு நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் தமயந்தி, உடனடியாக காந்தீபனை மீட்டு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள தனியார் அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காந்தீபன் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்ததாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். விரைந்து செயல்பட்டு மயங்கி விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் போலீஸ் தமயந்தியை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சகாயராஜ் மற்றும் அங்கிருந்த பயணிகள் பாராட்டினர்.

Related Stories: