சன்னாசிநல்லூர் தொடக்கப்பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் கல்விசீர் பொதுமக்கள் வழங்கினர்

செந்துறை, மார்ச் 15: சன்னாசிநல்லூர் தொடக்கப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்விசீரை பொதுமக்கள் வழங்கினர். செந்துறை அடுத்த சன்னாசிநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் வகையில் தனியார் பள்ளிக்கு நிகராக தரம் உயர்த்தும் நோக்கில் பொதுமக்கள் சார்பில் கல்விசீர் வழங்கும் விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மதலைராஜா தலைமை வகித்தார். உதவி வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார மேற்பார்வையாளர் குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு தேவையான டெஸ்க், டேபிள், கணினி, புரஜக்டர், மின்விசிறி, சேர், தண்ணீர் பாத்திரம், குடம், 7 பிரோ, மைக் செட் ரேடியோ, தேசிய தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள  பொருட்களை கல்வி சீராக சன்னாசிநல்லூரின் ஒவ்வொரு வீதியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதையடுத்து ெபாதுமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்றனர். ஆசிரியர்கள் ரங்கநாதன், சாமிநாதன், முல்லையூர் ஜாபர், தளவாய் ஜெயக்குமார்,  சிவராமபுரம் அபிராமசுந்தரி, அங்கனூர் துரைக்கண்ணு உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக தலைமையாசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார். ஆசிரியர் சத்தியா நன்றி கூறினார்.

Related Stories: