தொடங்கியது 10 வகுப்பு பொதுத் தேர்வு மாவட்டம் முழுவதும் 166 மையங்களில் 55,063 மாணவர்கள் எழுதுகின்றனர்

காஞ்சிபுரம், மார்ச் 15: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்புக்குகான பொதுத்தேர்வு நேற்று தொடங்கி, வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதில் மொழி பாடங்கள் மட்டும் மதியம் 2 மணி முதல் 4.45 மணி வரை நடத்தப்படுகின்றன. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 623 பள்ளிகள் இருந்து மாணவ, மாணவிகள் மொத்தம் 166 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.  28,580 மாணவர்கள், 26,483 மாணவிகள் என மொத்தம் 55,063 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வை நடத்துவதற்கு தமிழக அரசு தேர்வுகள் துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவகம் மூலம், தேர்வு மையங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் 250 பறக்கும் படைகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்வைக் கண்காணிக்க 166 தேர்வு மையங்களிலும் தலா ஒரு முதன்மை கண்காணிப்பாளர் என 166 முதன்மை கண்காணிப்பாளர்கள், 166 துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 166 தேர்வு மையங்களில் 3,015 அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 109 பள்ளிகளில் இருந்து 379 மாற்றுத் திறனாளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத் திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுவதற்கு 265 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் தேர்வுத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்கள் 16 காப்பு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கவும், விதிமுறைகளை மீறும் மாணவ, மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: