பொள்ளாச்சி பாலியல் விவகாரம் அதிமுக அரசை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 15: பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரவாயல் ரேஷன் கடை பஸ் நிலையம் அருகில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டனர். அங்கு திடீரென  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இளம்பெண்களிடம் பாலியல் வன்கொடுமை நடத்திய அதிமுக நிர்வாகி நாகராஜ் மற்றும் குற்றவாளிகளுக்கு  துணையாக இருக்கும் அதிமுக அரசையும், பாலியல் வன்கொடுமையை கண்டும் சம்பந்தப்பட்டவர்களை இதுவரை தண்டிக்காமல் இருக்கும் காவல் துறையை  கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர்.

மேலும் பாலியல் வெறியை பரப்பும் இணையதளங்களையும், கஞ்சா போதை, டாஸ்மாக்கையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமையை தடுக்க நாகராஜ் மற்றும் அவரது கும்பலை தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகளுக்கு துணையாக இருக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினரை கைது செய்தனர். அவர்களை, வானகரத்தில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர்.

Related Stories: