அனைத்து கடைகளையும் மூடி போராட்டம் வியாபாரியை தாக்கிய சுமை தூக்கும் தொழிலாளர்கள்

மதுராந்தகம், மார்ச் 15: மதுராந்தகம் நகரில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, எதிராக வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போரட்டம் நடத்தினர். இதானால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகரில் 600க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி, டிரக்குகள், சரக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் பொருட்களை, மதுராந்தகம் நகரில் இயங்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இறக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சுமை தூக்கும் வேலைக்கு தொழிலாளர்கள் கேட்கும் கூலி, கடைக்காரர்களுக்கு கட்டுப்படியாவதில்லை என கூறப்படுகிறது.மேலும், ஒருசில கடைக்காரர்கள், தங்களுக்கு மிகவும் எடை குறைவாக சரக்குகள் வருவதால் அவற்றை கடை ஊழியர்களை வைத்து இறக்வகுதாக, சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். அதை  தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. இந்த பிரச்னை கடந்த சில ஆண்டுகளாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு, இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, சுமை தூக்கும் தொழிலாளர்களே தொடர்ந்து கடைகளுக்கு சரக்குகளை இறக்கி வந்தனர். இந்நிலையில், மதுராந்தகம் நகரில் இயங்கும் ஒரு ஆயில் கடைக்கு, நேற்று முன்தினம் லாரியில் எண்ணெய் பாக்கெட்டுகள் வந்தன. அதனை, சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கியுள்ளனர். அப்போது கடை உரிமையாளர், நாங்களே இறக்கி கொள்கிறோம்.  நீங்கள் தேவையில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால, இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்து, கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை மதுராந்தகம் நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுராந்கம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைதொடர்ந்து, நேற்று மாலை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மதுராந்தகம் வந்தார். அங்கு, போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்த போராட்டம் தொடரும், பல பகுதிகளுக்கு விரிவடையும், மேலும் உண்ணாவிரதமும் நடைபெறும் என

தெரிவித்தார்.

Related Stories: