தேர்தல் புகார், குறைகளை தெரிவிக்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் பொதுமக்களுக்கு அழைப்பு

அரியலூர், மார்ச் 15: தேர்தல் புகார், குறைகளை தெரிவிக்க அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்யும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலட்சுமி தெரிவித்ததாவது: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்காக அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மூன்று வீதம் 6 பறக்கும் படைக்குழுக்களும், 6 நிலையான கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் அரசியல் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரங்களை கண்காணிக்கவும் ஒவ்வொரு குழுவிலும் துணை தாசில்தார், வட்டார வளர்ச்சி நிலை அலுவலர் தலைமையில் ஒரு காவல் சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், 1 வீடியோ பதிவாளர் என மொத்தம் 6 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பான கண்காணிப்பு பணியகளில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வாகனங்களில் பணமோ, பரிசு பொருட்களோ கொண்டு செல்கின்றனரா என்பதை ஆய்வு செய்வர். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார், குறைகளை தெரிவிக்கவும் தேர்தல் தொடர்பான விளக்கங்களை பெறவும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை 04329-228605, 228606, 228607 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் அளிக்கலாம். மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2286 தொடர்பு கொள்ளலாம். சம்மந்தப்பட்ட கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். கண்காணிப்பு பணியின்போது உரிய ஆவணமின்றி பணம், பரிசு பொருட்கள் கைப்பற்றுகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை முறையே பின்பற்ற வேண்டும். தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் புகைப்படம், வீடியோவுடன் எளிதில் தெரிவிக்கும் வகையில் cVIGIL என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலியை கூகுல் பிளே ஸ்டோர் களத்திலும் அல்லது தேர்தல் ஆணையம் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலியின் மூலம் பெறப்படும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் சம்மந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வகையில் இந்த செயலி செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வில் பறக்கும் படை அலுவலர் மற்றும் காவல் துறையினர்

உடனிருந்தனர்.

Related Stories: