சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடத்தில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது

விழுப்புரம், மார்ச் 15: விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு அனுமதியில்லை என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள எஸ்ஐகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. நேற்று காவல்துறை டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நடந்தது.  கூட்டத்தில், எஸ்பி ஜெயக்குமார் பேசுகையில், வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களையும், அவர்களுடன் செல்பவர்களையும் ஒரே நேரத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒருவரை காலை 10 மணிக்கு அனுப்பினால் அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ சென்றபிறகு அடுத்த வேட்பாளரை அனுப்ப வேண்டும். இவ்வாறு நேரம் ஒதுக்கீடு செய்து வேட்பாளர்களை மனுதாக்கல் செய்ய தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். வேட்பு மனுதாக்கலின்போது 100 மீட்டர் இடைவெளியில் கூட்டமாக வருபவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தல் விதிப்படி மனுதாக்கல் செய்பவர் மற்றும் அவருடன் வரும் குறிப்பிட்ட சிலரை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடமாக இருந்தால் அந்த இடத்தில் கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது. அதுபோல் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகிலும் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது. எங்கு பிரச்னை இல்லாமல் இருக்குமோ அந்த இடத்தில் மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும். தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதில் பெரும் பங்கு காவல்துறைக்குதான் இருக்கிறது. ஏதேனும் பிரச்னை நடந்தால் காவல்துறைக்குத்தான் பாதிப்பு என்பதை கருதி பணியாற்ற வேண்டும் என்றார்

Related Stories: