18 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்

புதுச்சேரி, மார்ச் 15:  தமிழகம் மற்றும் புதுவையில் முதன் முறையாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று மதியம் துவங்கி நடைபெற்றது. புதுச்சேரியிலிருந்து 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்களின் ஒழுங்கீன செயல்களை தடுக்க பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 6ம் தேதியும் துவங்கி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14ம் தேதி துவங்கி 29ம்  தேதி வரை நடைபெறும் என கல்வித்துறை அறிவித்திருந்தது. முதல் 4 தேர்வுகள் (மொழித்தாள் 1 மற்றும் 2, ஆங்கிலம் 1 மற்றும் 2) மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு முடிவடையும் எனவும், அடுத்த 3 தேர்வுகள் (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) காலை 10 மணிக்கு தொடங்கி 12.45 மணிக்கு முடிவடையும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.

 அதன்படி, நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் முதன் முறையாக 10ம் வகுப்பு ெபாதுத்தேர்வு பிற்பகலில் தொடங்கி நடைபெற்றது. புதுச்சேரி, காரைக்காலில் 18 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியதும் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்க்கவும், தொடர்ந்து 5 நிமிடங்கள் தேர்வு எழுதுவோரின் ஆவணங்களை சரி பார்க்கவும் நேரம் ஒதுக்கப்பட்டது. பின்னர் விடைத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் தொடங்கியது. முதல் நாளில் மொழித்தேர்வு நடைபெற்றது. புதுச்சேரி பிராந்தியத்தில் 83 அரசு மற்றும் 156 தனியார் பள்ளியை சேர்ந்த 13,960 பேர், தனித்தேர்வர்கள் 1,204 பேர் என மொத்தம் 15,164 பேர் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 15,117 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 47 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதேபோல் காரைக்கால் பிராந்தியத்தில் 27 அரசு மற்றும் 36 தனியார் பள்ளிகளை சேர்ந்த 2,639 மாணவர்கள், 300 தனித்தேர்வர்கள் என மொத்தம் 2,939 பேர் தேர்வு எழுதினர். மாநிலம் முழுவதும் மொத்தம் 18,056 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்வு மையங்களுக்கு வந்தனர். அங்கு ஹால் டிக்கெட் வைத்திருந்த மாணவர்களை ஆசிரியர்கள் சோதனை செய்த பிறகு தேர்வெழுத அனுமதி அளித்தனர். செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க வழக்கம்போல் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் நிரந்தரமான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள தேர்வு மையங்களை கண்காணிக்க 144 நிரந்தரமான படையும், 8 பேர் கொண்ட 2 பறக்கும் படையும் அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுவினர் மாணவர்கள் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கமாக பொதுத்தேர்வுகள் காலையில்தான் துவங்கி நடைபெறும். முதன் முறையாக மதிய நேரத்தில் தேர்வு துவங்கி நடைபெற்றதால் மாணவ, மாணவிகள் காலையில் படிப்பதற்கு நேரம் கிடைத்ததாக தெரிவித்தனர்.

Related Stories: