வேட்புமனு தாக்கல் வரை சஸ்பென்ஸ்

புதுச்சேரி, மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தலில் புதுவையில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிப்பதாக தகவல் பரவியுள்ளது. இவ்விவகாரத்தில் அக்கட்சி தலைவர் ரங்கசாமி வழக்கம்போல் ரகசியம் காத்து வருவதால், மனுதாக்கல் செய்யும் வரை வேட்பாளர் குறித்த சஸ்பென்ஸ் நீடிக்கும் என தெரிகிறது. புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம்தேதி  நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் கட்சிகள்  சுறுசுறுப்பு அடைந்துள்ளன. புதுச்சேரி ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது  தேர்தல் பிரசாரத்தை கனகசெட்டிகுளத்தில் இன்று துவங்குகிறது. இதற்கிடையே பிரதான  எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரசும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட  தயாராகி வருகிறது. நேற்று முன்தினம் என்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்,  தேர்தல் அலுவலகத்தை திறந்த ரங்கசாமி, கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜக,  பாமகவுடன் ஆலோசனை நடத்தினார்.

காங்., என்ஆர் காங்., ஆகிய இரு கட்சிகளும் இன்னும்  ஓரிரு நாளில் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. காங்கிரசில் யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அதே நேரத்தில்  என்ஆர் காங்கிரசில் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி களமிறங்கவுள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே தகவல் பரவியது. ஆனால் இதனை ரங்கசாமி உறுதிப்படுத்தவில்லை. தற்போது என்ஆர் காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி  பூசலால், மாஜி அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர்  எதிர்ப்பு காட்டுகிறார்களாம். இதன்காரணமாக முன்னெச்சரிக்கையாக ரங்கசாமி மற்றொரு வேட்பாளரையும் தேர்வு செய்து தயார்  நிலையில் வைத்திருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவுடன் கூட்டணி பேச சென்ற போதும், தைலாபுரத்தில் பாமக நிறுவனர்  ராமதாசை சந்தித்தபோதும், ரங்கசாமி தான் வேட்பாளராக நிறுத்த முடிவு  செய்திருந்த டாக்டர் நாராயணசாமியை உடன் அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் கடந்த ஒரு வாரமாக இதுபோன்ற நிகழ்வுகளை  ரங்கசாமி முற்றிலும் தவிர்த்து  வருவதால், புதிய வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற சந்தேகம் அக்கட்சி  தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

என்ஆர் காங்கிரசை பொறுத்தவரை வேட்பாளர் யார் என்பதை கடைசிவரை ரகசியமாக வைத்திருப்பதுதான் ரங்கசாமியின் வழக்கம். வேட்பு மனு தாக்கலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கட்சியின் பி படிவம் வழங்கும் வரை, ஒரு பரபரப்பிலேயே வைத்திருப்பார். இந்த முறையும் அதே பாணியை ரங்கசாமி கடைபிடித்து வருவதால், வேட்பாளர் கனவில் இருப்பவர்களுக்கு தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் தமிழகத்தில் அதிமுக தலைமை  கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக  வெளியிட்ட பின்னர் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை ரங்கசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: