ரயில்வே மேம்பாலம் பணி முடிந்தும் திறப்பதில் தாமதம் விருதுநகர் எம்எல்ஏ ஆய்வு

விருதுநகர், மார்ச் 15: விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரயில்வே மேம்பால பணிகள் நிறைவ டைந்துள்ள நிலையில் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.விருதுநகரின் நடுமையத்தில் ரயில்வே லையன் செல்வதால் தினசரி செல்லும் 60க்கும் மேற்பட்ட ரயில்களுக்காக தினசரி 10 மணி நேரம் வரை ரயில்வே கேட்டுகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் நகரில் கிழக்கு மற்றும் மேற்குபகுதி மக்கள் மறுபகுதியில் உள்ள மருத்துமவனை, கல்வி நிலையங்கள், மார்க்கெட், பஸ் நிலையம், அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ராமமூர்த்தி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டுமென மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2008ல் ரூ.20.53 கோடியில் கட்ட நிதி அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் மேம்பாலமா, தரைப்பாலமா என்ற பிரச்னையால் பாலம் கட்டும் பணி 8 ஆண்டுகள் தாமதம் ஆனது. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 4-3-16ல் பாலம் கட்ட பூமி பூஜை போடப்பட்டு, 18 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியத்தாலும், பல்வேறு காரணங்களாலும் பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்தது. நகர் மக்களும் கடந்த 37 மாதங்களாக குறுகிய சாலை அமைப்பினை கொண்ட தந்திமரத்தெரு, வாடியான் தெரு ரயில்வே கேட் பாதையில் காத்திருந்து சென்று வருகின்றனர். மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கி 37 மாதங்களான நிலையில், மேம்பாலம் கட்டுமான பணியும், பாலத்தின் இருபுற இறங்கு சாலைகளும் அமைக்கப்பட்டுவிட்டன. பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடவில்லை. வரும் மார்ச் 18ம் தேதி விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா சாட்டுதலுடன் துவங்க உள்ளது. நகர் மக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி மேம்பாலத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கடந்த பல நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராமமூர்த்தி ரோடு ரயில்வே மேம்பாலத்தை நேரில் பார்வையிட்டு கூறுகையில், ‘ராமமூர்த்தி ரோடு ரயில்வே மேம்பாலம் கட்டுமானம் மற்றும் இருபுறமும் சாலை அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளது. நகர் மக்கள் மருத்துவமனை, மார்க்கெட், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் செல்ல தந்திமரத்தெரு, வாடியான் தெரு ரயில்வே கேட்டுகளில் காத்திருந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா துவங்க உள்ளது. மக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி ராமமூர்த்தி ரோடு ரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உடனே கொண்டு வரவும், பாலத்தின் மேல்புறம் மின்விளக்குகள் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறைக்கு அதிகாரிகளிடம் தெரிவித்து இருப்பதாக கூறினார்.

Related Stories: