புளியங்குடி பகுதியில் யானைகள் மீண்டும் அட்டகாசம்

புளியங்குடி, மார்ச் 15:  புளியங்குடி பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள் கூட்டம், 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், 50க்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் பலா மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.  புளியங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் 100க்ம் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் கூட்டம், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும், நீர்ப்பாசன குழாய்களையும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புளியங்குடி இருந்து மேற்குத்தொடர்ச்சி மலை செல்லும் வழியில் பாட்டைக்குளம் பகுதியில் புளியங்குடி அருணாசல விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தவசிக்கண்ணு (57) என்பவரது தோப்புக்குள் 20க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. இவை 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், 50க்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் பலா மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து சேதப்படுத்தின. இதுகுறித்து கலெக்டர், மாவட்ட வன அலுவலர், புளியங்குடி வனச்சரகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு விவசாயி தவசிக்கண்ணு புகார் மனு அனுப்பி உள்ளார். மேலும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: