அதிகாரிகள் அலட்சியத்தால் சிதிலமடைந்த ரவணசமுத்திரம் சாலை

கடையம், மார்ச் 15: கடையத்தில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் சாலையில், ரயில்வே கேட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் வரையிலான சாலை கடந்த 10 ஆண்டுகளாக  கேட்பாரற்று கவனிப்பின்றி கிடக்கிறது. கேட்டின் கீழ்புறம் உள்ள சாலை, புதிதாக காட்சியளிக்கிறது. கடையத்தில் இருந்து ரவணசமுத்திரம் அக்ரஹாரம் பிரிவு வரை சாலை புதிதாக போடப்பட்டு உள்ளது. ஆனால் இடையே உள்ள 500 மீட்டரில் உள்ள சாலை மட்டும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த வழியை ரவணசமுத்திரம், மாலிக் நகர், வீராசமுத்திரம், ராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், செட்டிகுளம், கல்யாணிபுரம் உள்ளிட்ட 20 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் தினமும் இவ்வழியாக சென்று வருகின்றனர்.

பிள்ளைகுளம், அகம்பிள்ளைகுளம், மந்தியூர், கோவிந்தபேரி, ராஜாங்கபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாக ரவணசமுத்திரம் ரயில் நிலையம் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிதிலமான சாலையில் விழுந்து காயமடைகின்றனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதே இச்சாலையின் இந்நிலைக்கு காரணமென சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் குண்டும், குழியுமான ரவணசமுத்திரம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: