களக்காட்டில் மூடப்பட்ட அரசு மருத்துவமனை மீண்டும் செயல்படுமா?

களக்காடு, மார்ச் 15:  களக்காட்டில் 10 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக களக்காடு அண்ணா சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாகும். களக்காடு யூனியன் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மருத்துவமனையில் களக்காடு மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு யூனியன் நிர்வாகத்தில் இருந்தே சம்பளம் வழங்கப்பட்டது. இதேபோல் யூனியன் நிர்வாகத்தின் மூலமே மருந்து, மாத்திரைகளும் வாங்கப்பட்டது. மருந்துகள் வாங்க ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க ரூ.2 லட்சம் தேவைப்பட்டது.  

இந்நிலையில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனை திடீரென மூடப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவ சிகிச்சைக்கு அவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு இல்லாமல் 10 ஆண்டுகளாக பூட்டப்பட்டே கிடப்பதால் மருத்துவமனை கட்டிடமும் பாழடைந்து வருகிறது. கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கிறது. இப்பகுதியை இரவில் குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை புனரமைத்து அரசு மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: