தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பு கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, மார்ச் 15:  தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பான வழக்கில் கலெக்டர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாளையங்கோட்டையை சேர்ந்த காட்டுராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமையன்பட்டி ஊராட்சியில் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சியில் 52 வார்டுகளில் அள்ளப்படும் குப்பைகள், ஓட்டல் கழிவுகள், ஆலைக்கழிவுகள், சாலை விபத்துகளில் இறக்கும் நாய், பன்றியின் உடல்கள் ராமையன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கனேரியில் 150 ஏக்கர் நிலத்தில் கொட்டப்படுகின்றன. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பைகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றன. குப்பைகள் மலைபோல் குவிந்திருப்பதால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. மழைக்காலங்களில் குப்பை மேட்டிலிருந்து வரும் கழிவுநீர், அருகன்குளம் கால்வாய் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் தாமிரபரணி ஆறு அசுத்தம் அடைந்து வருகிறது. வெயில் காலங்களில் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டு 10 கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

ராமையன்பட்டியில் குப்பைகள் கொட்ட தடைவிதித்தும், குப்பைகளை அங்கிருந்து அகற்றக்கோரியும் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அவ்வழக்கில் ராமையன்பட்டியில் உள்ள குப்பைகள் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால் ராமையன்பட்டியில் இருந்து குப்பைகளை அகற்றவில்லை. தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் ராமையன்பட்டியில் நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான 150 ஏக்கரில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றவும், இனிமேல் அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதித்தும் நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகிேயார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க காலஅவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும். இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க நெல்லை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: