மாற்றுத்திறன் தன்மையை பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, மார்ச் 15:  சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனின் தன்மையை தேர்தல் ஆணைய செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது மாற்றுத்திறனின் தன்மையினை, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Person with Disabilities என்ற செயலியினை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்து கொள்ளவும், ஏற்கனவே இடம் பெற்றுள்ள பெயரை ஊர்ஜிதம் செய்து கொள்ளவும், தேர்தல் நாளன்று சக்கர நாற்காலிகள் தேவைப்படுவோர் தங்களின் தேவைகள் குறித்த முன்பதிவும், மேற்கண்ட செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை, மாவட்ட அளவில் தற்பொழுது புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள, 24 மணி நேரமும் செயல்படக் கூடிய 1800 4257 036 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விளக்கங்களை பெறலாம். மேலும், 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு பேசி தேர்தல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்தார்.  

Related Stories: