கோடை துவக்கத்திலேயே எகிறும் இளநீர் விலை ரூ.50க்கு விற்பனை

காரைக்குடி, மார்ச் 15:  காரைக்குடியில் அக்னி வெயிலுக்கு முன்னரே இளநீர் விலை உயர்ந்துள்ளது. காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அக்னி வெயில் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. தற்போது கோடைக்கு இதமான தாகம் தணிக்கும் இளநீர், தர்பூசணி, நுங்கு வெள்ளரிக்காய், போன்ற இயற்கையான உணவு பொருட்களையே மக்கள் பெரிதும் வாங்கி உண்கின்றனர். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததாலும் கஜா புயலில் தென்னை மரங்கள்  பனை மரங்களுக்கும் சரி வர நீர் பாய்ச்சாததாலும் தென்னை விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிறிய அளவிலான இளநீர் 15 ரூபாய்க்கும், கொஞ்சம் பெரிய அளவிலான இளநீர் 20 ரூபாய்க்கும் விற்றது. தற்போது கோடை வெயில் ஆரம்பித்ததில் இருந்து சிறிய இளநீர் 30 ரூபாய்க்கும் கொஞ்சம் பெரிய இளநீர் 40க்கும் பொள்ளாச்சி போன்ற வெளியூர்களில் இருந்து வரும் இளநீர் 50 ரூபாய்க்கும் விற்கப்படுவதால், இளநீர் விரும்பிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். வியாபாரி ஒருவர் கூறுகையில், “காரைக்குடிக்கு பெரும் பாலும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற வெளியூர்களில் இருந்தும் தான் அதிக அளவில் வருகின்றன. கடந்த ஆறு மாதங்களாக தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால் இளநீர் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளநீர் வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் திருவிழா காலம் என்பதாலும் தேவை அதிகரிப்பதால், இளநீரை போட்டி போட்டு வாங்க வேண்டியுள்ளது. இதனால் விலை சற்று அதிகமாக தான் விற்க வேண்டியுள்ளது’’ என்றார்.

Related Stories: