தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தும் அகற்றப்படாத அரசு பிளக்ஸ் விளம்பரங்கள்

ராமநாதபுரம், மார்ச் 15: தேர்தல் நடத்தை வீதி அமலுக்கு வந்தும் ராமநாதபுரம் நகர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அரசியல் கட்சியினரின் பிளக்ஸ் போர்ட்டுகள் அகற்றாமல் உள்ளது.பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 10ம் தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்களில் 24 மணி நேரத்திலும், பொது இடங்கள் 48 மணி நேரத்திலும், தனியார் இடங்கள் 72 மணி நேரத்திலும் அகற்ற வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நகர, ஊராட்சி பகுதிகளில் உள்ள போர்டுகளை அகற்ற அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டங்களும் நடத்தப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் அனைத்து இடங்களிலும் அரசு விளம்பரங்கள் அரசியல் கட்சியின் பிளக்ஸ் போர்டுகள் என அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். ஆனால் நகரில் பல அரசு விளம்பரங்கள், பிரதமர் மோடியின் திட்ட விளம்பரங்கள் அகற்றாமல் உள்ளது. வங்கிகள், சத்துணவு மையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனை என மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் முதல்வர் படத்துடன் உள்ள போர்டுகள் அகற்றப்படாமல் இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் ஆதரவாக செயல்படுகிறார்களாக என சந்தேகப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

கட்சியினர் கூறுகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அரசு அலுவலகங்களில் உள்ள அரசின் விளம்பரங்களை இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. விதியை மீறியதாக கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். கட்சியினர் மீது எடுத்த நடவடிக்கையை விதிகளை கடைபிடிக்காத அரசு அலுவலகங்கள் மீது மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா என கேட்கின்றனர்.

Related Stories: