திருமங்கலம் பகுதி கிராமங்களில் தேர்தல் விதிகளை அமல்படுத்த ஆர்வம் காட்டாத அதிகாரிகள்

திருமங்கலம், மார்ச் 15: திருமங்கலம் பகுதி கிராமங்களில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 10ம் தேதி முதல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமங்கலம் நகரில் உள்ள கொடிக்கம்பங்களில் கொடிகள் அகற்றப்பட்டன. மேலும் தலைவர்கள், படங்கள் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. நான்கு வழிச்சாலை, சாலை தடுப்பு சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஆனால் திருமங்கலம் கிராம பகுதிகளில் அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமங்கள் முழுவதும் சர்வ கட்சிகளின் கொடிக்கம்பங்களில் தேர்தல் விதியை மீறி கொடிகள் பறந்து வருகின்றன. அரசு அலுவலகங்களில் தலைவர்களின் பிறந்தநாள் வாழ்த்து, வரவேற்று எழுதப்பட்ட வாசகங்கள் அழிக்கப்படவில்லை. நகர் பகுதியில் கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் அடிக்கடி விசிட் அடிப்பதால் அங்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த ஆர்வம் காட்டும் அதிகாரிகள் கிராமபகுதிகளில் யாரும் வரமாட்டார்கள் என்ற எண்ணத்தில் சுணக்கம் காட்டுவதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: