தேர்தல் விதிமுறைகளை மீறி எடுத்து சென்று பறிமுதலான தொகையை உரிய ஆதாரங்கள் தந்து மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

திருவாரூர், மார்ச் 15: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்படும் தொகையினை மீண்டும் உரிய ஆதாரங்கள் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் எடுத்துச் செல்லும் நபர்களை பிடிப்பதற்காக 136 அலுவலர்களை கொண்ட 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனையானது நடைபெற்று வருகிறது.அதன்படி நேற்று வரையில் 3 பேர்களிடம் 56 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ரூ.50 ஆயிரம் வரையில் நபர் ஒருவர் எடுத்துச் செல்ல அனுமதி உள்ள நிலையில் இதை தவிர ரூ.10 லட்சம் வரையில் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லலாம். இதையும் மீறி உரிய ஆவணங்கள் இல்லாமல்  எடுத்துச் செல்லும் நபர்களின் தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் இதுபோன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் தொகைகளை மீண்டும் உரிய ஆவணங்களை அளித்து பெற்றுக்கொள்வதற்காக மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், தேர்தல் செலவு கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட கருவூல அலுவலர் ஆகிய  3 அலுவலர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களிடம் ஆதாரங்களை அளித்து தொகையினை பெற்றுகொள்ளலாம் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்  ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த குழுவில் இடம் பெற்றுள்ள  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரை 04366-221033 என்ற எண்ணிலும், தேர்தல் செலவு கண்காணிப்பு அலுவலரை 04366-221000 என்ற எண்ணிலும், மாவட்ட கருவூல அலுவலரை 04366-225793 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து கைப்பற்றப்பட்ட தங்களது பணத்தை பொதுமக்கள் விடுவித்துக் கொள்ளலாம்.இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: