நீடாமங்கலம் பகுதியில் தூர்வாராததால் புதர் மண்டி கிடக்கும் ஆறுகள் விவசாயிகள் வேதனை

நீடாமங்கலம், மார்ச் 15:   நீடாமங்கலம் அருகில் உள்ளது மூணாறு தலைப்பு. இங்கிருந்து கோரையாறு, வெண்ணாறு, பாமனியாறு என 3 ஆறுகள் பிரிந்து திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளுக்கு சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனம் தருகிறது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆறுகளின் நடுவில் தீவு திடல் போன்று சிறு, சிறு திட்டுகள் உருவாகி காடுகள், மரங்கள்  மண்டியுள்ளது. சம்மந்தப்பட்ட துறையினர் ஆண்டுதோறும் சில இடங்களில் தூர்வாரி நிறுத்திக்கொண்டனர்.  இந்த ஆறுகளில் கோரையாற்றில் ஒரத்தூர், நீடாமங்கலம் பெரியார் தெரு, முல்லைவாசல், பெரம்பூர், கண்ணம்பாடி, காரிச்சாங்குடி, தண்டாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், பாமனியாற்றில் சித்தமல்லி, பரப்பனாமேடு, தட்டி சம்பாவெளி, ராயபுரம் தெற்கு தோத்திரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, பாப்பையன் தோப்பு, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், கிளரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆறுகளின் நடுவே திடல் போன்று நாணல், மரம், காட்டாமணக்கு போன்றவைகள் மண்டி கிடக்கிறது.  இதனால் இந்த ஆறுகளில் தண்ணீர் வரும்போது விவசாயத்திற்கான தண்ணீரை முழுமையாக பெற முடியவில்லை என விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு  மரம், செடி கொடிகளை அகற்றி, ஆறுகளை முழுமையாக தூர்வார வேண்டும் என்பதே விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: