திருத்துறைப்பூண்டி பகுதியில் வாந்தி, பேதி பாதிப்பு பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 15: திருத்துறைப்பூண்டியில் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் குடிநீர் தரம் குறித்து நகராட்சி ஆணையர்(பொ)பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  இது குறித்து ஆணையர் (பொ) பாஸ்கர்  மேலும் தெரிவித்துள்ளதாவது: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் தினசரி ஹைப்போ குளோரைடு மூலம் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

குடிநீர் விநியோக தலைப்பில் 2 பிபிஎம் அளவிலும் கடைமடை பகுதியில் 0.55 பிபிஎம் அளவிலும் குளோரின் அளவு நிர்ணயிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. இதனை கண்காணிக்க நகராட்சி அலுவலர்களை கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு தினசரி குடிநீரில் குளோரின் உள்ளதா என்று தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது.  மேலும் நகரில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, பொது நிறுவனங்களில் குளோரின் கலந்து சுத்தமான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. எனவே  உடல் நலத்தை கருத்தில்கொண்டு குடிநீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இத்தகவலை நகராட்சி ஆணையர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: