திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் ஊராட்சியில் 4 மாதமாக பராமரிப்பின்றி கிடக்கும் தரைமட்ட கிணறு கிணற்றின் மேல் மூடி புயலில் சேதம் தொட்டிக்கு மின் இணைப்பு இல்லை

திருத்துறைப்பூண்டி, மார்ச் 15:திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் ஊராட்சியில் கடந்த 4 மாதமாக பராமரிப்பின்றி மாசு படிந்து தரைமட்ட கிணறு உள்ளது.கஜா புயலால் இக்கிணற்றின் மூடி சேதமடைந்து சிதறி கிடக்கிறது. இக்கிணற்றிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு மின் இணைப்பு கொடுக்கப்படாததால் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வேளூர் ஊராட்சி  தூண்டிக்காரன்வாய்க்கால் அருகில் தரைமட்டக் கிணறு அமைத்து மேல்நிலைத்  தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வேளூர்,  தண்டலைச்சேரி போன்ற பகுதிகளுக்கு பைப் லைன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு  வருகிறது.இந்த பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்  குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுகிறது. இதில் தண்ணீர் வராதபோது  அந்த தரைமட்டக் கிணறு மூலம்தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும்  தரைமட்டக் கிணறு அருகில் கைப்பம்பும் போடப்பட்டுள்ளது. இந்த அடிபம்ப்பிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

இந்நிலையில் தரைமட்ட கிணறு மேலே போடப்பட்டிருந்த  இரும்பாலான மூடி கஜா புயலில் சிதறி பல இடங்களில் கிடக்கிறது. தற்போது  கிணறு மூடப்படாததால் மாசுபட்டு கிடக்கிறது. ஆனால், இதிலிருந்து தண்ணீர்  வழங்கப்படுவதில்லை. கஜா புயலுக்கு பிறகு 4 மாதங்கள் ஆகியும் இன்னும்  தரைமட்ட கிணற்றை சீர் செய்வது தொடர்பாக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேலும்  இந்த தரைமட்டக் கிணறு அருகில் சிலர் அனுமதியில்லாமல் கிணறு அமைத்து தண்ணீர்  எடுத்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்திட வேண்டுமென்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து வேளூர் மேலத்தெரு  அருள்மேரி கூறுகையில், வேளூர் ஊராட்சிக்கு தரைமட்ட கிணறு மூலம் தடையின்றி  குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கஜா புயலுக்கு பிறகு கிணறு மூலம் தண்ணீர்  வழங்கப்படவில்லை. கொள்ளிடம் தண்ணீர் வராதபோது பல பகுதியிலிருந்து  பெண்கள் நடந்து வந்து அடிபைப்பில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். எனவே கிணற்றுக்கு மேல்மூடி அமைத்து கிணற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.  வேளூர் மெயின் ரோடு கலைச்செல்வி கூறுகையில், இந்த தரைமட்டக் கிணறு மூலம்  தண்ணீர் கஜா புயலுக்கு பிறகு வழங்கப்படவில்லை. இதன் அருகிலேயுள்ள அடிபம்ப்  மூலம்தான் குடிநீர் பிடித்து செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதியும்  கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு தரைமட்டக் கிணற்றை சுத்தம் செய்து தண்ணீர்  வழங்க வேண்டும் என்றார்.  சமூக ஆர்வலர் ஜெயானந்தம் கூறுகையில், வேளூர்  ஊராட்சி தரைமட்டக் கிணற்றிலிருந்தும் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர்.  அதன் அருகிலுள்ள கை பம்ப் மூலமும் தண்ணீர் பிடித்து வருகின்றனர். கஜா  புயலுக்கு பிறகு தரைமட்டக் கிணறு மூடியில்லை. தண்ணீரும் குடிநீர் தொட்டிக்கு  சப்ளை செய்வதற்கு மின்னிணைப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை. தற்போது கோடை காலம் வேளூர் ஊராட்சி மட்டுமல்ல அருகிலுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து  தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

எனவே கிணறை சுத்தம் செய்து தண்ணீர் வழங்க  வேண்டும் என்றார்.

Related Stories: