கிருஷ்ணன்கோயில் தேரோட்ட தினத்தில் வாக்குப்பதிவு

நாகர்கோவில், மார்ச் 15: நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் தேரோட்ட தினத்தன்று வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. நாகர்கோவில், கிருஷ்ணன்கோயில் கிருஷ்ண பக்த சேவா சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தலைவர் தாமோதரன், பொருளாளர் கண்ணக்குமார் ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. அதே நாளில் நாகர்கோவிலில் பிரசித்த பெற்ற கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில் தேரோட்டமும் நடக்க உள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.கோயில் தேரோடும் வீதியில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம் ஆகிய 2 இடங்களிலும் வாக்குச்சாவடிகள் அமையும். இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தேரோட்டத்திற்கு சிரமமாக இருக்கும். எனவே தேர்தல் ஆணையம் இந்த பகுதி வாக்குச்சாவடிகளில் 18ம் தேதி வாக்குப்பதிவை தள்ளிவைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான பட விளக்கத்தையும் வழங்கினர்.  இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் உறுதியளித்தாக பக்தர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: