இரணியல் அருகே மது விருந்தில் தகராறு அதிமுக பிரமுகர் மகன் அடித்து கொலை

திங்கள்சந்தை, மார்ச் 15: இரணியல் அருகே வீராகுளத்தின் கரையோரம் அதிமுக பிரமுகர் மகன் உடலில் காயங்களுடன் மர்மமாக இறந்து கிடந்தார். குமரி மாவட்டம் இரணியல் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். ஆளூர் பேரூராட்சி முன்னாள் அதிமுக செயலாளர். தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது மகன் நவீன் (22), கூலித்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் ராஜாக்கமங்கலம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். நவீன் தனது பாட்டியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஆளூர் வீராகுளத்தின் கரையோரம் பலத்த காயங்களுடன் நவீன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியினர் இரணியல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். நவீன் இறந்து கிடந்த பகுதியில் மதுபாட்டில்களும், ரத்த கறையுடன் கற்களும் சிதறிக் கிடந்தன. மேலும் அப்பகுதியில் கிடந்த உருட்டுக்கட்டை ஒன்றையும் போலீசார் ைகப்பற்றினர். இதனால் அவர் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டிக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நவீனும், அவரது நண்பர்களும் அடிக்கடி வீராகுளத்தின் கரையில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நவீன் நண்பர்கள் சிலருடன் குளத்தின் கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்தவர்கள் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த நவீன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். நவீனுடன் மது அருந்தியவர்கள் குறித்த விசாரணையில் இறங்கிய போது, அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிடிபட்ட பின்னரே, நவீன் அடித்து  கொல்லப்பட்டாரா, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: