பொதுப்பணித்துறை அனுமதியின்றி குமரி குளங்களில் மீன்பிடிக்க தண்ணீர் திறப்பு கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

நாகர்கோவில், மார்ச் 15: குமரி குளங்களில் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை திறந்து விடுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கோடையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. குமரியில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறியதுடன், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் கோடையிலும் குளுகுளுவென காணப்பட்ட குமரி மாவட்டம் தற்போது இதரமாவட்டங்கள் போன்று பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலேயே வெயில் கொளுத்துகிறது. நீர்நிலைகள் தொடர்ந்து மாசுபடுத்தப்படுவதுடன், அவைகள் தடையை மீறி நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தாமரை வளர்ப்போர் மற்றும் மீன் வளர்ப்பவர்களால் மேலும் மாசுபடுத்தப்பட்டு வருகிறது. மீன்களுக்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், தாமரை வளர போடப்படும் ரசாயன உரங்கள் போன்றவற்றால், தண்ணீர் மாசடைந்து உள்ளது. இவற்றில் குளிக்கும் மக்களும் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர்.

கோடையில் குளங்களை மீன் வளர்ப்போர் திறந்து விடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கடும் தண்ணீர் பஞ்சமும் ஏற்படுகிறது. இதனால் பொதுப்பணித் துறை சார்பில் கடந்த இரு ஆண்டுகளாக மீன் வளர்க்க அனுமதி மறுத்து ஏலமும் விடப்படவில்லை. ஆனாலும், அனுமதியின்றி மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு இருந்தன. தற்போது அவை வளர்ந்து விட்டதால் குளங்கள் வாரியாக அவற்றை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பாசனப்பிரிவு நிர்வாகிகள் சிலரை கவனித்து விட்டு குளங்களின் மடைகளை திறந்து விட்டு தண்ணீரின் அளவை வெகுவாக குறைத்து மீன்களை பிடிக்கின்றனர். எஞ்சியுள்ள தண்ணீர் ஒரு சில நாட்களில் ஆவியாகி குளங்கள் காய்ந்து வெடிப்பு ஏற்பட்டு வறண்டு வருகின்றன. இப்போது தான் கோடை காலம் தொடங்கி உள்ளது.

பருவமழைக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், குளங்களில் தண்ணீரை திறந்து விட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

நாகர்கோவில் அருகே பீமநகரி குளம் உள்பட பல குளங்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு அவை வறண்டு போயுள்ளன. தற்போது கோதண்டராமன் குளத்திலும் தண்ணீர் சிறிய மடை வழியாக திறந்து விடப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாரபட்சமின்றி குளங்களில் தண்ணீரை திறந்து விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுப்பணித்துறைக்கு தெரியாது

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகரிடம் இதுபற்றி கேட்டபோது, குளங்களில் மீன் வளர்க்க நாங்கள் அனுமதிக்க வில்லை. அப்படி இருக்கும்போது, மீன் பிடிக்க நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும். இதுபற்றி புகார்கள் வந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுவோம். சீதப்பாலில் தோவாளை கால்வாய் படித்துறைகளை சிலர் தங்கள் வசதிக்காக பாழ்படுத்தியது பற்றியும் புகார் இல்லை. இந்த கோடையில் கால்வாய் பராமரிப்பின் போது, படித்துறைகள் முன்பு போல் சீரமைக்கப்படும் என்றார்.

சீதப்பாலில் கால்வாய் படித்துறைகள் ஆக்ரமிப்பு

சீதப்பால் வழியாக தோவாளை கால்வாய் செல்கிறது. இங்கு சீதப்பால், ஆண்டித்தோப்பு, பூதப்பாண்டி, துவரங்காடு மக்கள் மட்டுமின்றி நாகர்கோவில் உள்பட வெளியூர்களிலிருந்தும் குளிக்க கார்களில் வருகின்றனர். இந்நிலையில் வாகனங்கள் வந்து செல்ல வசதியாக படித்துறைகளின் அகலத்தை 3 அடிகள் வரை ஆக்ரமித்து கான்கிரிட் அமைத்துள்ளனர். அதனால் குழந்தைகள் வயதான பெண்கள் படித்துறைகளில் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோல், அங்குள்ள படித்துறையை தன்னிச்சையாக வேறு இடத்திற்கு மாற்றி விட்டனர். ஏற்கனவே இருபடித்துறைகள் அழிந்து விட்ட நிலையில், பொதுமக்கள் இறங்கி குளிக்கவும், துணிகள் துவைக்கவும் முடியாமல், அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது அணைகள் அடைக்கப்பட்டுள்ளதால், இதனை பயன்படுத்தி, ஏற்கனவே இருந்தது போல் படித்துறைகளை மீண்டும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: