தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி சார்பில் புதிய துறைமுக கடற்கரையில் தூய்மை பணி

தூத்துக்குடி, மார்ச் 15: தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக புதிய துறைமுகம் கடற்கரையில் தூய்மை பணி நடந்தது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் வேலாயுதம் துவக்கி வைத்து பேசும்போது ‘பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் நெகிழி இல்லா தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்றார்.

 இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு புதிய துறைமுகத்தில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளான நெகிழிப் பை, மீன்பிடி வலைகள் போன்றவற்றை சுத்தம் செய்தனர். மேலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கடற்கரையில் நெகிழி ஒழிப்பு சம்பந்தமான மணல் ஓவியங்கள் வரைந்து பொதுமக்களை ஈர்க்கும் வண்ணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி ரவிக்குமார் ஒருங்கிணைத்தார்.

Related Stories: