தேர்தல் பணியில் அலுவலர்கள் கவனம், அக்கறையுடன் செயல்பட வேண்டும் கரூர் கலெக்டர் அறிவுரை

கரூர், மார்ச் 15: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கவனம், அக்கறையுடன் செயல்பட வேண்டும் என கரூர் கலெக்டர் அறிவுரை கூறினார்.பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டியவை குறித்து கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கூட்டத்தை தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் துவக்கி வைத்தார், அவர பேசுகையில், நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து அலுவலர்களும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகள் மொத்தம் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் மண்டல அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கு இந்த பயிற்சியை வழங்க உள்ளீர்கள்.

எனவே இங்கு சொல்லப்படுகின்ற அனைத்து தகவல்களையும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் அதைக்கேட்டு தெளிவு பெற வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று முதலில் வாக்கு சாவடி மையத்தில் உள்ள முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காட்ட வேண்டும். அனைத்து வாக்குசாவடிகளிலும் முதன்முறையாக விவிபாட் எனப்படும் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அவருக்கு மட்டும் காட்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே இந்த கருவியினை கையாளும் முறை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணியில் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கரூர் ஆர்டிஓவுமான சரவணமூர்த்தி, தாசில்தார் பிரபு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்...

Related Stories: